எழுத்தாளர்: மலர்விழி கணேஷ்
வெற்றி ! வெற்றி !! ஆஸ்டின் தமிழர்களின் நீண்ட நாள் கனவாக இருந்த ஆஸ்டின் தமிழ்ப் பள்ளிக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது !! . இந்த அங்கீகாரம் கிடைத்துள்ள அமெரிக்காவின் ஒரு சில தமிழ் பள்ளிகளில் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளியும் ஒன்று என்பது நம் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை. இதற்கான இறுதி வடிவச் சான்றிதழ் கடந்த ஏப்ரல் -1 அன்று தமிழ்ப் பள்ளி சுற்றுலாவின் போது Dr.சின்ன நடேசன் அவர்களால் வெளியிடப்பட்டது.
இருபது மாணவர்கள், ஆறு தன்னார்வ ஆசிரியர்களுடன் 2012ல் அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடத்திட்டத்துடன் துவங்கப்பெற்ற ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி இன்று 2018ல் நூற்று எழுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், 50 தன்னார்வலர்களுடன் வளர்ந்து ஆலமரமாய் நிற்கின்றது. இதன் அடுத்த கட்ட முயற்சியாக இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் அயல்மொழிக்கான அங்கீகாரம் பெற ஆஸ்டின் தமிழ் பள்ளித் தீவிரமாக இறங்கியது.
2016 செப்டம்பர் மாதம் தமிழ் மொழி அங்கீகாரம் பெறும் முயற்சியின் முதல் படியாக ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு ஹூஸ்டன், செயிண்ட் லூயிஸ், சான் அன்டானியோ போன்ற நகரங்களின் தமிழ்ப் பள்ளிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரின் இரண்டு ஆண்டு கடின முயற்சிக்குப் பிறகு தமிழ் மொழி அங்கீகாரத்திற்கென இருக்கும் சிறப்புத் தணிக்கைக் குழுவினர் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளிக்கு வருகை தந்துத் தணிக்கைச் செய்தனர்.
ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி , அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வருவது இந்த முயற்சிக்கான ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்தது. அங்கீகாரக் குழு வழிகாட்டுதற்கான கையேடு , அவசரகாலத்திற்கான திட்டங்கள் போன்றவற்றை வகுப்பதில் ஈடுப்பட்டது. ஜனவரி 2017 இல் ஜுடி மாஸ் அவர்களின் தலைமையில் அங்கீகாரத்திற்கான தயார்நிலைக் குழு ஆய்வு செய்து ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி தமிழ் மொழி அங்கீகாரத்தைப் பெறத் தேவையான அனைத்து அடிப்படைத் தகுதிகளுடன் இருப்பதாகப் பரிந்துரை செய்தது. இது நம் குழுவிற்குச் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
அதே உற்சாகத்துடன் 2017 கோடையில் AdvanceED ஏற்பாடு செய்திருந்த பட்டறையில் கலந்து கொண்ட பள்ளி அங்கீகாரக் குழுவினர் பள்ளி மதிப்பீடுகள், மேம்பாடுகள் மற்றும் அனைத்து விஷயங்களிலும் விரிவான ஆவணங்களை பல்வேறு சந்திப்புகள் மற்றும் உள் மதிப்பீடுகளுக்குப் பிறகு தயார் செய்தனர்.
இறுதி நடவடிக்கையாக AdvanceEDன் Dr.சிண்டி க்ராஃபோர்ட் மற்றும் ஜுடி மாஸ் ஆகியோர் அடங்கிய தமிழ் அங்கீகாரத் தயார்நிலைக் குழு நவம்பர் 05, 2017ம் நாள் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளிக்கு வந்திருந்து ஆசிரியர்கள், மாணவர்கள், குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைவருடனும் விரிவான நேர்காணல்கள் மேற்கொண்டனர். மேலும் பள்ளியின் அனைத்து வகுப்புகளுக்கும் சென்று ஆசிரியர்களின் கற்பிக்கும் முறைகளையும் மாணவர்களின் ஆர்வத்தையும் கண்டு அறிந்தனர். தமிழ் நன்கறிந்த Texas state Universityயின் பேராசிரியர் நந்தினி ரங்கராஜன் குழுவில் இருந்த மற்றவர்களுக்குத் தமிழ்ப் பாடம் , தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்து பேருதவி புரிந்தார்.
ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி செயல்படும் முறையால் வெகுவாக ஈர்க்கப்பட்ட AdvancEd குழு, பள்ளி அங்கீகாரத்திற்குப் பரிந்துரைக்கப்படும் என்று உறுதியளித்தது . குழுவின் பரிந்துரைப்படி டெக்சாஸ் மாநில மற்றும் தேசிய குழு ஆஸ்டின் தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கனவான பெருமைமிகு அங்கீகாரத்தை மார்ச் 2018ல் வழங்கியது.
இந்தப் பெருமைமிகு அங்கீகாரத்தைப் போற்றிப் பாதுகாக்கும் கடமை ஆஸ்டின் வாழ் தமிழர்கள் அனைவரின் கைகளிலும் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி இந்த தருணத்தில் தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றது.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!
Leave a Reply